புதன், 20 டிசம்பர், 2017

தகடூர் தர்மராசர் திருவிழா


                              தகடூர் தர்மராசர் திருவிழா

                 கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்பார் புறப்பொருள் வெண்பாமலை ஆசிரியர். அத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தமிழ் நாட்டில் ஓரு போரை மட்டும் மையமிட்டு தோன்றிய முதல் இலக்கியம் தகடூர் யாத்திரையாகும்.  மலைகளைச் சூழ்ந்து சமதளம், காடுகளைக் கொண்டுள்ளது, அத்தகைய சிறப்பு வாய்ந்த தகடூர் நாட்டில் இன்றும் பரவலாக வழக்கில் உள்ள தர்மராசர் திருவிழா பற்றி காண்போம்.

தகடூர்


                தருமபுரி என்று அழைக்கப்படும் இன்றைய பகுதியே பழங்காலத்தில்  தகடூர் என்று அழைக்கப்பட்டுள்ளதை இலக்கியம் மூலம் அறியமுடிகிறது. அதியர் , இராட்டிரகூடர்கள், நுளம்பர்கள், வாணவராயர்கள், காடவராயர்கள், மற்றும் சேர, சோழ பல்லவ அரசர்கள் ஆண்டுள்ளனர்.

                தர்மராசர் பெயராலே இப்பகுதி தர்மபுரி என்று அழைக்கப்படுவதாக கள ஆய்வில் அறியமுடிந்தது. முறைவிருந்துகளும், சமய சடங்குகள், திருவிழாக்கள் போன்ற மரபுகள் சிறப்பு வாய்ந்ததாகவும் தொன்றுதொட்டு இப்பகுதியில் பின்பற்றபடுகிறது.தருமபுரியில் விவசாயம் அதிக அளவில் செய்யப்படுகின்றன.
                 கால்நடை வளர்ப்பும் அதிகம் நடைப்பெறுகிறது இவ்விரண்டும் தொன்று தொட்டு நடந்து வருகிறது. நிலங்கள் அதிகமாக வன்னியர் கட்டுபாட்டிலும், வைரக்கொடி வேளாளர், நாயக்கர் கட்டுபாட்டிலும் ஆங்காங்கே காணப்படுகிறது. 

கோவில் பெயர்கள்

                  தருமராசர் கோவில்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அதாவது தர்மராசர் கோவில், குந்தியம்மன் கோவில், திரௌபதிகோவில், போத்துராசர் கோவில் என்றெல்லாம் பிற பெயரில் அழைக்கப்படுகிறது. தருமபுரியில் உள்ள அனைத்து தலைமை கிராமங்களிலும் இக்கோவிலகள்; காணப்படுகின்றது.

கோவில் நிர்வாகம்

                 தருமராசர் கோவில் முழுவதும் வன்னியர் குல சத்ரியர் கட்டுப்பாட்டிலே உள்ளது. தர்மக்கர்த்தா, பூசாரிகள், ஊர் கவுண்டர்கள், மந்திரிகவுண்டர், நாட்டுகவுண்டர் என அனைவரும் வன்னியர் குல சத்ரியர்களே. இத்திருவிழாவில் அனைத்து சமுக மக்களும் கலந்தகொள்கின்றனர் இருப்பினும் மற்ற சமுகத்தவர்களைச் சிலையைத் தொட அனுமதிப்பதில்லை. இதன் மூலம் ஓர் ஆதிக்க போக்கையும் காணமுடிகிறது.

கோவிற் சிலைகள் 


                   இக்கோவில்களில்  பாண்டவர் ஐவர் சிலை, திரௌபதி சிலையும், வியாசர் சிலை, துளசியம்மன், குந்தியம்மன், போத்துராசர் சிலைகளும், கிருஷ்ணன் சிலையும், காவல் தெய்வ சிலையும் உள்ளது. இதே அமைப்பில் அனைத்து ஊர்களிலும் காணப்படுகிறது. அனைத்து சிலைகளும் மர வேலைப்பாட்டால்  ஆனது. பாண்டவர்  ஐவர் சிலைகளுக்கும் தனித்தனி கரகங்கள் உள்ளன.

திருவிழா


                    தமிழர் புத்தாண்டாகக் கருதப்படும் சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை இத்திருவிழா நடைப்பெறுகிறது. சில இடங்களில் மாரியம்மன் திருவிழாவுடன் கொண்டாடப்படுகிறது. பதினொறு நாள் முதல் ஓரு மாதம் வரை இத்திருவிழா நிகழ்த்தப்படுகிறது.

கொடியேற்றம்


                     பங்குனி மாதம் அமாவாசை முடிந்த வளர்பிறை நாளில் கொடியேற்றம் விழா நடைப்பெறுகிறது. அனுமன் கொடியேற்றப்படுகிறது. நாட்டுப்புற தெய்வங்கள் மட்டும்மில்லாமல் அனைத்து தெய்வங்களுக்கும்  கொடியேற்றும் மரபு மிகத் தொன்மையானது.

பாரதம் படித்தல்


                 கொடியேற்றம் நிகழ்வு நடந்த அன்று முதல் பாரத கதையானது உரைவடிவில் மாலை நான்கு மணிமுதல் இரவு எட்டுமணிவரை நடைப்பெறுகிறது. திருவிழாவின் இறுதி நாள் வரை படிக்கப்படுகிறது. இதற்கு பாரதம் படித்தல் என்று பெயா.

வழிபாடு


                    சாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு அதிகாலையில் கங்கை பூசை நிகழ்த்தப்படுகிறது. பின்னர் வெகு விமரிசையாக தீ மிதித்தல் நிகழ்த்தப்படுகிறது.  ஊர் மக்கள் தமது வேண்டுதல் நிறைவேற பயபக்தியுடன் தீமிதிக்கின்றனர். பின்னர் தமக்கு திருமணம், வேலை, குழந்தை வரம் வேண்டி வரிசையாக குப்புற படுத்து வணங்கிய நிலையில் மக்கள் படுத்திருக்க அவர்கள் மீது சாமி சிலைகள் தூக்கி செல்கின்றனர். இறைவன் இவர்கள் மீது சென்றால் தாம் தீய சக்தியிடம்மிருந்து காப்பற்றபடுவோம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

                     ஒவ்வெரு நாளும் பொங்கல் வைக்கப்படுகிறது. தேங்காய் உடைக்கப்படுகிறது வழைப்பழம் படைக்கப்படுகிறது.  ஊதுபத்தி கற்பூரம் காட்டப்படுகிறது. விளக்க தட்டு எடுக்கப்படுகிறது. மற்றும் விழாவில் ஒரு நாள் கூழ் ஊற்றப்படுகிறது.

                 சாமி சிலைகள் அனைத்தும் எடுத்துக்கொண்டு ஊர்வலம் நிகழ்த்தப்படுகிறது வானவேடிக்கையும் நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொருவர் வீட்டிற்கும் சிலைகள் தூக்கிச் சென்று தமது சார்பாக வணங்கி மரியாதை செய்யப்படுகிறது.

                சாமியிடம் வேண்டிக்கொண்டவர்கள் விழா நாட்களில் கோவில் நிர்வாகத்தை அணுகாமல் அன்னதானம் செய்கின்றனர்.


தீமிதித்தல்

                மக்கள் தம்மை ஏதாவது தீய சக்தி பிடித்திருந்தால் அது திரொளபதியம்மன் தீமிதி திருவிழாவில் கலந்துகொண்டால் விலகிவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். திருவிழாவின் பேது சாமி அழைத்து அருள் வாக்கு கேட்டபின் குண்டம் வெட்டப்படுகிறது. பன்னிரு அடிக்கு குறையாமல் இருபத்தி ஐந்து அடிவரை நீளத்தையும் எட்டு அடி முதல் தேவைக்கு ஏற்ப  அகலமும் கொண்டதாக குண்டம் அமைக்கப்படுகிறது.

              குண்டம் பற்ற வைக்கும் முன் தேங்காய், பழம் உடைத்தும் மற்றும் பூசை மேற்கொண்டு பின்னர் கற்பூரம் பற்ற வைத்து அந்த தீயில் இருந்தே மரக்கட்டைகள் பற்றவைக்கப்பட்டுகிறது. அதிகலையில் சாமிக்கு கங்க பூசை செய்து குண்டத்தின் அருகில் எடுத்து வந்து நிற்பர் அதே சமயத்தில் குண்டம் இறங்கும் அளவிற்கு தயார் செய்யப்படுகிறது.

             குண்டத்தின் அருகில் சாமி சிலை தூக்கிக்கொண்டு மக்கள் நிற்க பம்பைக்காரர் பம்பை அடித்து மந்திரம் கூறி சாமி அழைப்பர். திருவிழாவில் சாமிக்கு மகிழ்ச்சி என்றால் உடனே சாமி வரும். குண்டத்தில் இறங்க முதலில்  திரௌபதியம்மன் சிலை தான் அனுமதிக்கப்படுகிறது.

               எல்லா சாமி சிலைகளுக்கும் பூசை செய்து சாமி அழைக்கப்பட்டு  குண்டத்தில் இறக்கப்படுகிறது. சாமி சிலைகள் குண்டம் இறங்கிய பின் மக்கள் குண்டத்தில் இறங்குகின்றனர். வீட்டில் யாரவது இறந்திருந்தால் ஒருவருடம் முடியாமல் குண்டம் இறங்கக் கூடாது.

            பெண் பூப்படைந்திருந்தாலோ அல்லது பெண்கள் மாதவிடாய் நாட்களும் தீட்டாகக் கருதப்படுகிறது. அச்சமயத்தில் அவர்கள் தீமிதித்தல் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை.

                  தீமித்தலில் முதலில் சாமி சிலைகளும் அடுத்து வன்னியர் இனமக்களும் அடுத்து மற்ற சமுக மக்களும் தீமிதிக்கின்றனர். அந்தணர்களே ஆனாலும் வன்னியர் யாரவாது ஒருவர் இறங்கி சென்றபின் தீமிதிக்க அனுமதிக்கின்றனர்.

வாள்போடுதல்

                  தமது வீர வாள் மற்றும் கோவில் வாள் எடுத்து  சண்டையிடுவதைப்போல் பாவனையில் வீர நடனமாடுகின்றனர். இந்நிகழ்வுக்கு வாள்போடுதல் என்று பெயர். அனைத்து தர்மராசர் கோவில்களிலும் இம்முறை உள்ளதைக் காணமுடிகிறது.

தர்மராசர் வழிபாடு


                    தர்மராசர் சிலை ஊர்வலமாக எடுத்து வரும்போது. ஒவ்வொரு கால் அடிக்கும் ஒரு தேங்காய் உடைக்கப்படுகிறது. பொறி அள்ளி வீசப்படுகிறது. சில இடங்களில் பழங்கள் தானம் தரப்படுவதையும் காணமுடிகிறது. மற்ற சிலைகளுக்கு இல்லாமல் தர்மராசர் சிலைக்கு மட்டும் இவ்வாறு நிகழ்த்தப்படுகிறது.

படையல்


                   தேங்காய், பழம், பொங்கல் மற்றும் அபிசேகம் படைக்கப்படுகிறது. வீட்டுக்கு ஒருவர் காய் தட்டு எடுத்து செல்கின்றனர். பாண்டவர் பிறப்பு நாடகம் நிகழ்த்தபடும் அன்று கூழ் ஊற்றப்படுகிறது.

குறிப்பெடுத்தல்

                   தர்மராசர் கோவில் திருவிழாவில் சாமியழைத்தல் நிகழ்வு இடம்பெறுகிறது.  வந்திருப்பது சாமிதான் என்பதை உறுதிசெய்ய பூசாரியோ அல்லது ஊர், நாட்டு கவுண்டர்களோ (வன்னியர்;) ஒரு பொருளை மனதில் நினைப்பர். அதை சாமி வந்தவர் சரியாக எடுக்க வேண்டும். இல்லை என்றால் வந்திருப்பது தீய சக்தி என்று எண்ணி தண்டனை தரப்படுகிறது. இத் திருவிழாவில் பேயோட்ட நிகழ்வும் நிகழ்த்தப்படுகிறது.

பாரதத்தெருக்கூத்து


                     ஒவ்வொரு தர்மராசர் கோவில்களிலும் தெருக்கூத்து இடம் பெறுகிறது. முதல் நாடகமாக கண்ணன் பிறப்பு நிகழ்த்தப்படுகிறது. அடுத்தடுத்து முறையே வன்னியர் புராணம்(வன்னியன் பிறப்பு), பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பு,  குறத்தி நாடகம், துயில் உறித்தல்,  பவளக்கொடி, சுபத்திரை திருமணம், அர்சுணன் தபசு, கண்ணன் தூது, அரவான் களபலி, பீஸ்மர் படுகளம், அபிமன்யூ வதம், ஜெராசந்தன் வதம், பதினேழாம் நாள் கர்ணன் மோட்சம், துரியோதனன் வதம், தர்மன் பட்டாபிசேகம் எனும் பதினெட்டு நாள் நாடகம் கட்டாயம் நடைப்பெறுகிறது. சில இடங்களில் இன்னும் கூடுதலான நாடகங்களும் நிகழ்த்துவதைக் காணமுடிகிறது.
    பதினெட்டு நாள் நாடகத்தை கோவில் நிர்வாகத்தினர் நடத்துவர். வேண்டுதல் நிறைவேறியதன் காரணத்தால் பொதுமக்களும் தமது சார்பாக நாடகங்களை நிர்வாக அனுமதி பெற்று நடுத்துகின்றனர். இவ்வாரே பதினெட்டு நாட்களுக்கு மேல் விழா செல்ல ஒரு காரணமாக உள்ளது.  

துரியோதனன் உருவம்

                            மண்ணில் துரியோதனன் சிலை உருவாக்கப்படுகிறது. நாடகம் முடிந்தபின் சிலைகள் அனைத்தும் இதன் மீது மிதித்தவாறு எடுத்துச் செல்லப்படுகிறது.  இந்த மண்னை விளை நிலத்தில் ஒருபிடியளவு போட்டாலும் விளைச்சல் அதிகம் என்கின்றனர் இம்மக்கள். பெரியாண்டவராக இம்மக்களே துரியோதனனை வழிப்படுவதையும் காணமுடிகிறது. பெரியாண்டவர் வழிபாடும் இந்த உருவ வழிபாடே என்பது நினைவில் கொள்ளத்தக்கதாக உள்ளது.

பட்டாபிஷேகம்


                    துரியோதனன் இறந்த பிறகு தர்மன் அரசனாக முடி சூடுவதை குறிக்க இந்நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது.

போத்துராசர் வழிப்பாடு


                 தர்மர் பட்டாபிஷேகம் முடிந்தபின்பு அடுத்த நாள் இந்த வழிபாடு நிகழ்த்தபடுகிறது. போத்துராசர் சிலை முன்பு  ஒர் கரிய ஆட்டு கிடாயை படுக்க வைத்து போத்துராசர் கதை சொல்லபடுகிறது. இந்நிகழ்வின்போது ஆடு தூங்கிவிடுகிறது.  கதை சொல்லப்பட்ட பின்பு ஆட்டு கிடா எழுப்ப பட்டு போத்துராசர் சிலைக்குப் பலியிடப்படுகிறது. தேங்காய், பழம் உடைக்கப்படுகிறது. கற்பூரம் ஊதுபத்தி காட்டப்படுகிறது. பொங்கல்லிட்டு படையல் வைக்கப்படுகிறது.

அனுமன் கொடிக்கு நன்றி செலுத்துதல்


                 பாரதகதையில் அனுமன் கொடியைப் பாண்டவர்கள் பயன்படுத்தினர். போரில் வெற்றிபெற்றதைக் கொண்டாடும் வகையில்  அனுமன் கொடி திரொளபதியம்மன் திருவிழாவில் ஏற்றப்படுகிறது. திருவிழா முடிந்த இறுதியாக அனுமன் கொடிக்கு சிறப்பு செய்யபடுகிறது.
    அனுமன் கொடிக்கும் தேங்காய், பழம் உடைக்கப்படுகிறது. கற்பூரம் ஊதுபத்தி காட்டப்படுகிறது. பொங்கல்லிட்டு படையல் வைக்கப்படுகிறது.

அன்னதானம்

                தானத்தில் உயர்ந்த தானம் அன்னதானம் என்பது பழமொழி பசித்தோர்க்குப் பசியைப் போக்குவதே மானிடர்களுக்கு மதிப்பைத் தரும் என்பர். இத்திருவிழா தொடங்கிய நாள் முதல் இறுதி நாள் வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. காலை , மாலை இருவேலைகளும் உணவு தானமாக அளிக்கப்;படுகிறது.

இறுதியாக சாமியழைத்தல்


                       திருவிழா முடியும் இறுதி நாள் அனைத்து கடவுள்களையும் தனித்தனியாக அழைக்கப்பட்டடு குற்றம் குறையிருந்தால் மன்னிக்குமாறு வேண்டப்படுகிறது. திருவிழாவினால் மகிழ்ச்சி என்று வினவப்படுகிறது அதன் பின் திருவிழா முடிவடைகிறது. வன்னியர் சமுகத்தினர் ஒன்று சேர்ந்து கணக்குகளைச் சரிப்பார்ப்பர். மீதம் உள்ள பணத்தையும், கோவில் நகைகளையும் கணக்கு பார்த்து சத்தியம் வாங்கி நிர்வாகத்தில் சேர்க்கப்படுகிறது.

தர்மராசர் கோவில்


                     கள ஆய்வின்போது  பல ஊர்களில் தர்மராசர் கோவில் உள்ளதையும், திருவிழா நடைப்பெறுவதையும் காணமுடிந்தது. பழைய தருமபுரி, அதியமான்கோட்டை, பாலக்கோடு மேல் தெரு, பாலக்கோடு வட்டாச்சியர் அலுவலகம் எதிரில், மல்லாபுரம், மாரண்டள்ளி, காரிமங்கலம், பாடி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம், கடமடை, சோம்பள்ளி, குந்தியம்மன் கோவில், கோட்டூர் போன்ற ஊர்களில் கோவில் உள்ளதைக் காணமுடிகிறது.

இசைக்கருவி


                   தர்மராசர் உள்ளிட்ட மற்றவர் வழிப்பாட்டின்போதும்  பம்பை மட்டுமே முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. சேமகுளம், ஊதுகுழல், சங்கு போன்ற இசை கருவிகள் பயன்படுத்தபடுகிறது.

முடிவுரை


                     மனிதர்கள் தமக்கான ஒரு தெய்வ வழிப்பாட்டை உருவாக்கி அதை தமது அடையாளமாக நிலை நிறுத்துகின்றனர். அந்தவகையில் வன்னியர் குல சத்ரியரில் ஒரு பிரிவினர் மட்டும் தர்மராசர் வழிப்பாட்டைத் தொன்றுதொட்டு நிகழ்த்தி வருகின்றனர். இவ்விழாவின் போது ஒரு மாதம் இம்மக்கள் ஒற்றுமையாக விழா எடுக்கின்றனர். இவ்விழாவிற்கு தமது உறவினர்களும் கட்டாயம் அழைக்கப்படுகின்றனர் என்பதை இக்கட்டுரை வழி அறியமுடிகிறது.
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக